கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால்...மத்திய அரசும், மாநில அரசும் பதவியை விட்டு விலகலாம் - ரவீந்திரநாத்!

கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால்...மத்திய அரசும், மாநில அரசும் பதவியை விட்டு விலகலாம் - ரவீந்திரநாத்!

கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால் மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி பதவியை விட்டு விலகலாம் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர்  ரவீந்திரநாத் கூறினார்.

தமிழக மாணவர்கள் அதிக அளவில் படிக்க வேண்டும்:

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இறப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், நிறைய மாணவர்கள் நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் அதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு குறைகளைக் களைய வேண்டும் என்றும் கூறினார். அதேபோல், தமிழகத்தில் வரக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் படிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலவச நீட் பயிற்சி மையங்கள்: 

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளில் படிக்க நீட் தேர்வு அவசியம் என்பதால், தமிழக அரசு நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தங்கும் விடுதியுடன் கூடிய இலவச நீட் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: பொய்க்கு நோபல் பரிசு..! அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கம்..! வெற்றி களிப்பில் எடப்பாடி பழனிசாமி..!

மாநில அரசு, மத்திய அரசு பதவி விலகலாம்:

அதேசமயம், க்யூட் நுழைவுத் தேர்வை மாநில அரசின் பல்கலைக்கழகங்களிலும், மாநில அரசின் பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் மத்திய அரசு திணிக்க நினைத்தால் தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். அதேபோல், கல்வியை இலவசமாக கொடுக்காவிட்டால் மத்திய அரசாக இருந்தாலும் சரி,  மாநில அரசாக இருந்தாலும் சரி பதவியை விட்டு விலகலாம் என்று அரசாங்கத்தை சாடி பேசினார்.