வெளுத்து வாங்கிய கனமழை: தங்க இடமின்றி தவிக்கும் மெரினா கடற்கரை மீட்பு படையினர்...

சென்னை மெரினா கடற்கரையில் அங்குள்ள மெரினா கடற்கரை மீட்பு படையினர் தங்க இடமின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை: தங்க இடமின்றி தவிக்கும் மெரினா கடற்கரை மீட்பு படையினர்...

சென்னையின் பிரபல சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்குத் தலமாகவும் புகழ்பெற்ற மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதில் பெரும்பாலான பொதுமக்கள் கடல் அலையில் குளிப்பது வழக்கம். அப்படி குளிக்கும்போது ஒரு சிலர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கி பலியாகும் நிலை ஏற்படும். இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்து, உயிர்களை காப்பதற்காக  தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பாக 25 பேர் கொண்ட குழு கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளில்  கடல் அலையில் சிக்கிய 8 பேரை உயிருடன் மீட்டு, 30 பேரை இறந்த நிலையில் மீட்டுள்ளது.

மேலும் கடல் அலை அதிகமாக இருந்தால் பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுத்து நிறுத்தியும், பீச் பக்கி வாகனம் மூலமாக ரோந்து பணிகளிலும் இந்த குழு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடல் அலையில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும், மரணத்தை தடுக்கும் வகையில் செயல்பட்டும் வந்த மீட்பு படை குழுவினர் தங்களது உடல்நலனை பாதுகாக்க முடியாமல் மழை காலத்தில் ஒதுங்க இடவசதியின்றி தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படை மெரினா குழுவினர் வெயில் மற்றும் மழை காலங்களில் ஓய்வு எடுப்பதற்காகவும்,  மீட்க தேவைப்படக்கூடிய  படகு, பக்கி வாகனம் உள்ளிட்ட உபகரணங்களை வைப்பதற்காகவும் கடற்படை மீட்பு பணிகள் நிலையம் என்ற பெயரில் மெரினா மணற்பரப்பில் கூடாரம் ஒன்றை அமைத்து கொடுத்தனர். ஆனால் இந்த கூடாரம் தற்போது பராமரிப்பன்றி கிடப்பதால் மீட்பு படை குழுவினர் மழை, வெயில் காலங்களில் ஒதுங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் உபகரணங்கள் பழுதாவதாகவும் உடனடியாக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை பராமரிப்பன்றி கிடக்கும் கூடாரத்தை ஒழுங்கப்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.