நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை... பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை... பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்...

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை நேரத்தில் தொடங்கிய பலத்த மழை இரவிலும் நீடித்தது. இதனால் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் செயல்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், மழை நீரில் மூழ்கியது. மேலும், பயணிகள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களும் மூழ்கின. அவ்வாறு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம், பேருந்துகளின் படிக்கட்டு வரையிலும் சென்றது. இதனிடையே, மனகாவலம்பிள்ளைநகர் மாநகராட்சி மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மருத்துவமனை முழுவதும் தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனை தவிர தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. பரவலாக மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைப்போல கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்தது. இந்திரா நகர், வடக்குத்து, வடக்கு மேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழையால், அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் சில வாகனங்கள் ஊர்ந்து செல்ல, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. குறிப்பாக உதவி காந்தல் எனும் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே இருளில் மூழ்கியது.

தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால், சாலையில் மழைநீர் ஓடியது. மேலும், ஓடைகளில் செந்நிறத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நடுவச்சேரி, துலுக்கமுத்தூர், சேயூர், கை காட்டிபுதூர், ஆட்டையம்பாளையம், பழங்கரை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, குளம் போல் காட்சியளிக்கிறது. கோவை மற்றும் திருச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான காமராஜர் சாலை, குமரன் சாலை, வாலிபாளையம், ராயபுரம், கருவம்பாளையம், ஆண்டிபாளையம் மற்றும் எஸ்.ஆர்.நகரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நீரோடையாக மாறிய சாலையில், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன.

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னனுடன் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம், சிவானந்தா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.