வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த குடும்ப தலைவிகள்!

அரக்கோணம் வட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காத குடும்பத் தலைவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 15 ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பித்து பணம் கிடைக்காதவர்கள் பிரத்யேக இணையதளம் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை  மாவட்டம், அரக்கோணம், வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்தில் பணம் கிடைக்காததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மீண்டும் விண்ணப்பிப்பதற்காகவும் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர்.

இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தகவல் கேட்டு வருகின்ற மகளிரை அமர வைத்து வரிசைப்படி அனுப்பி அவர்களது மனுக்களின் நிலையை தெரிவித்து வருகின்றனர்கள். பெரும்பாலான மனுக்களின் நிலை பரிசீலனையில் உள்ளது என்ற தகவல் மட்டுமே இணையத்தில் உள்ளது. 

இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்