”நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கும் அரசு பணி"- முதலமைச்சர் உறுதி!

நடப்பாண்டில் 17 ஆயிரம் பேரும், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரும் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெடுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே. எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட 11 வயது சிறுமி...போலீசார் தீவிர விசாரணை!
 
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் கூறினார். 

நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார்.