தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட 11 வயது சிறுமி...போலீசார் தீவிர விசாரணை!

11 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மூர்த்தி - ஏகவல்லி தம்பதியினருக்கு, ஒரு மகன் மற்றும் தீப்திகா என்கிற மகள் உள்ளனர். இதில் தீப்திகா ஆர் கே சாலையில் உள்ள மகளிர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்பாலிட்டு சிறுமி தீப்திகா சேலையால் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த தீப்திகாவின் சகோதரர் கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காத காரணத்தினால் அக்கம் பக்கத்தின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையும் படிக்க : 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து...!ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

இதனை அடுத்து தீப்திகாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தீப்திகா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு, தீப்திகா நன்றாக படிக்கின்ற மாணவி என்பதும், அக்கம் பக்கத்தில் யார் என்ன வேலை சொன்னாலும் உடனடியாக செய்து முடிப்பார் என்பதும், நான்கு முறை விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.