செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்துக்கு இலவசப் பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு !

செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்துக்கு இலவசப் பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு !

செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு இலவசப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அதுவும்  தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பது வரலாற்றுக்குரிய நிகழ்வாகும். இந்த போட்டியில் 140க்கும் அதிகமான நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

இலவசப் பேருந்து:

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. முதற்கட்டமாக வருகிற 25-ந்தேதி முதல் 5 பஸ்கள் மாமல்லபுரத்துக்கு இயக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பஸ்களின் சேவை இருக்கும்.

சென்னை மத்திய கைலாஷில் இருந்து இருந்து புறப்படும் இந்த இலவச பேருந்து ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறைவான கட்டணத்தில் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க ஆட்டோக்கள் இயக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை அணுகுவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.