ராசிபுரத்தில் முதல் பெண் நடத்துனரான இந்திராணி! பேருந்தில் ஓங்கி ஒலிக்கும் சிங்கபெண்ணின் குரல்!!

நாமக்கல் ராசிபுரத்தில் அரசு நகர விரைவுப்பேருந்தில் முதன் முறையாக பெண் ஒருவர் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராசிபுரத்தில் முதல் பெண் நடத்துனரான இந்திராணி! பேருந்தில் ஓங்கி ஒலிக்கும் சிங்கபெண்ணின் குரல்!!

பெண் என்பவள் ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்றார்கள். ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் நாங்களும் செய்வோம் என்று கூறி ஆட்டோ, லாரி, விமானம் ஓட்டுவது போன்று எல்லா துறைகளிலும் தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். அதேபோன்று அரசு பேருந்துகளில் நடத்துனராகவும் பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராசிபுரத்தில் முதன்முறையாக அரசு நகர விரைவுப்பேருந்தில் பெண் ஒருவர் நடத்துனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்......

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பழனியப்பனூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகள் இந்திராணி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவர் தனியார் கல்லூரி ஒன்றில் அலுவலக வேலையில் உள்ளார். இந்நிலையில் இந்திராணியின் தந்தை சேலம் மாவட்டம் மெய்யனூர் டிப்போவில் முதுநிலை பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்தவர் கடந்த 2010 ஆண்டு உயிரிழந்தார். இதனால் இவருடைய வேலையை கருணை அடிப்படையில் இந்திராணியின் சகோதரருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் சகேதரர் வேண்டாம் என்று கூறியதால், தற்போது அந்த வேலை இந்திராணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பணிமனையில் அரசு நகர விரைவுப்பேருந்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு பேருந்தில் பெண் நடத்துனர் பணியமர்த்தப்பட்ட பெருமையை பெற்றுள்ளார் இந்திராணி. 

காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் தொடர்ச்சியாக பேருந்துக்குள் அங்கும், இங்கும் நடந்தபடி பயணச்சீட்டை வழங்குவது, பேருந்து நிறுத்தங்களில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது என சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் இந்திராணியிடம் இது குறித்து கேட்ட போது, எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்கிறார் இந்திராணி. 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதில் நான் மட்டும் தான் பெண் நடத்துநர்.

இப்பணிக்காக ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டதால் ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நடத்துடனர் பணி மிகுந்த ஜாலியாக உள்ளது. சக பணியாளர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு தருகின்றனர். விருப்பபட்டுத்தான் இந்த வேலையை செய்து வருகிறேன் என்கிறார் இந்த சிங்க ராணியான இந்திராணி.