பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொன்னை மற்றும் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவால், வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து  ஒரு லட்சத்து 5 ஆயிரம்  கனஅடியாக உயர்ந்துள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிவதால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களில் உள்ள மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெருக்கெடுத்துள்ள வெள்ளம், அப்பகுதியில் செல்லம்மாள் ஆலயத்தை மூழ்கடித்தபடி ஆர்ப்பரித்து செல்கிறது.