ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னத்துரை, நியாய விலைக் கடைகளில்  குடும்ப அட்டைகளில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்யாவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது என்று கூறுகிறார்கள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சிறப்புத் தீர்மானம்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

அதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் அனைவரின் கைரேகைகளை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, வீடுகளுக்கே சென்று கைரேகை பெறக்கூடிய நடவடிக்கைகள் வரக்கூடிய நாட்களில் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும், கைரேகை பதிவு செய்யாவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது எனவும், தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.