தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் விழாக்கள்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் விழாக்கள்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்தபாறைப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கோ பூஜை, யாக பூஜைகள் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மும்மதங்களைச் சேர்ந்த மக்கள் பூத்தேர் பவனியில் பங்கேற்றனர். பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் முன்னே செல்ல முக்கிய வீதிகள் வழியாக பூத்தேர் பவனி வந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில்  பங்குனி அசுபதி நட்சத்திர தீர்த்தவாரி விழா நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீர்த்தவாரி தினத்தன்று மட்டும் கோவில் கிணற்றில் நீராட அனுமதி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.