தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி...

பருவமழை தொடக்கம் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால்  விவசாயிகள் மகிழ்ச்சி...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக, திருவான்மியூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் லேசான மழையும், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும் பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காட்பாடி. குடியாத்தம். அணைக்கட்டு. பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் காலை முதலே லேசான மழை பெய்து வந்த நிலையில், குடியாத்தத்தில் பிற்பகலில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதேபோல் பரமகுடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. அரியனேந்தல், பொட்டிதட்டி, வேந்தோனி ஆகிய இடங்களில் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியதால், வீடுகளுக்குள் நீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மழை பெய்தது. ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.