செல்லூர் ராஜூ கேள்விக்கு துரைமுருகன் பதிலால் சிரிப்பலை...!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில், காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

இதேபோல், மறைந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, மறைந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வினாவிடை நேரத்தின்போது, மிருகண்டா நதி அணையை புனரமைக்கும் பணிகள் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ள மத்திய நீர்வளத்துறை ஒப்புதலுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

அப்போது, அத்திக்கடவு அவினாசி திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், காலிங்கராயன் அணையில் தண்ணீர் வந்த பிறகு, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 43 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருவதாக கூறினார். பில்லூர் 3 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதன் மூலம் 168 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுக்குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற நதிநீர் ஆதாரம் என்றும், ஆனால், எல்லா நேரங்களிலும் நதிகளில் தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 240 எம்.எல்.டி தண்ணீர் இருப்பதாகவும், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்தார்.  

இதில் பதில் அளித்த அமைக்கர் கே.என்.நேரு, கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் போடாமல் இருந்ததாகவும், இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றார். 

அப்போது குறிக்கிட்டுப் பேசிய செல்லூர் ராஜூ, குடிநீர் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதுடன், குடிநீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.  இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துக்கு கொண்டிருக்கும் போது, அணைகளில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டபோது, சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னர், சென்னை மழைநீர் வடிகால் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணிகமேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் வரிசையில் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தனர். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல், இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாலு ஆகியோர் சந்தித்தனர். அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.