வ.உ.சி. மைதானத்தின் கழிவறையில் ஊக்க மருந்துகள்...விளையாட்டு வீரர்கள் உபயோகித்தார்களா?

வ.உ.சி. மைதானத்தின் கழிவறையில் ஊக்க மருந்துகள்...விளையாட்டு வீரர்கள் உபயோகித்தார்களா?
Published on
Updated on
1 min read

நெல்லை வ.உ.சி. விளையாட்டு மைதானத்தின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அந்த மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. இதனால் இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து, கடந்த மாதம் நெல்லை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட கேலரிகள் கொண்டு புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தில் நேற்று முதல் போட்டியாக நடைபெற்ற எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது, அந்த மைதானத்தில் உள்ள கழிவறைகளில் அஸ்திமின் ( astymin) விஐடி பி-12 மற்றும் அமினோ ஆசிட்( VIT B12 and Aminoacids) ரினர்வ் பிளஸ்( renerve plus) ஆகிய மூன்று ஊக்க மருந்துகளின் பயன்படுத்தப்பட்ட கவர்களும், ஊசிகளும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனிடையே நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்கள் இதை பயன்படுத்தினார்களா அல்லது ஏற்கனவே வெளியூர்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சென்ற வீரர்கள் இந்த போதை ஊசிகளை பயன்படுத்தினார்களா என கேள்வி எழுந்துள்ளது.

சட்டப்படி விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவது குற்றம் என்றபோது நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மைதானத்தில் அதுவும் மாவட்ட ஆட்சியர் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அன்று ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com