தேவையற்றவர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை விற்கக்கூடாது- காவல்துறை எச்சரிக்கை…  

விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் தவிர, உரிய காரணங்களின்றி அடையாளம் தெரியாதவர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தேவையற்றவர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை விற்கக்கூடாது- காவல்துறை எச்சரிக்கை…   

திருநெல்வேலியில் 4 நாட்களில் முன்விரோதம் காரணமாக 5 கொலைகள் நடந்தது. இதனையடுத்து உடனடியாக முன் விரோத கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காக ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம் என்ற பெயரில் ஸ்டாமிங் ஆபரேஷன் நடத்தப்பட்டு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 52 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 3,325 பேர் கைது செய்யப்பட்டு, 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வீச்சரிவாள் மற்றும் கத்திகள் தயாரிப்போரை கண்காணிக்கவும், தவறானவர்களின் கைகளுக்கு செல்லாத படி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்படி கத்தி, வீச்சரிவாள் மற்றும் அரிவாள் தயார் செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர்களை அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் அழைத்து கூட்டம் நடத்தினர். மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி, எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவுச் செய்ய வேண்டும் எனவும், விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தவிர மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை, உரிய காரணங்களின்றி அடையாளம் தெரியாத நபர்களிடம் விற்கக்கூடாது என தெரிவித்தனர்.

மேலும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுமெனவும், சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு கத்தி தயாரிக்கும் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கபடும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.