கௌரவக் கொலைக்கு பயந்து திருமணமான 2வது நாளே கணவனை பிரிந்த இளம்பெண்... மனமுடைந்த காதலன் தற்கொலை

கௌரவக் கொலைக்கு பயந்து திருமணமான 2வது நாளே கணவனை பிரிந்த இளம்பெண்... மனமுடைந்த காதலன் தற்கொலை

கௌரவக் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்பியிடம் மனு கொடுத்து இருந்த நிலையில் இளம் பெண் பெற்றோருடன் சென்றதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் ஏரிக்கரை தெரு பகுதியில் வசித்து வரும் காதல் ஜோடிகள் தாரணி மற்றும் வெற்றிவேல் இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தாரணிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். 

பெற்றோர்கள் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தாரணி மற்றும் காதலன் வெற்றிவேல் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணி விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நேரில் வந்த இளம் காதல் ஜோடிகள் திருமணம் முடித்த கையோடு கழுத்தில் மாலையுடன் தங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்தனர்.  

இந்த சம்பவம் குறித்து மனுவை பெற்றுக்கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இவர்கள் கொடுத்த புகாரின் மீது விசாரணை செய்ய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

 இதனைத்தொடர்ந்து காதல் ஜோடிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் பெண் அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதாகவும் அவருடன் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்ததையடுத்து காவல் நிலைய காவலர்கள் இவர்களைப் பிரித்து தனித்தனியாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
இதனைத்தொடர்ந்து காதலியை பிரிந்த மனவேதனையில் இருந்த வெற்றிவேல் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் முடித்த மறுநாளே காதலி விட்டு சென்ற இடத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.