தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை மும்முரம்... தி.நகரில் அலைமோதும் கூட்டம்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணி, பட்டாசு மற்றும் இனிப்புகளை வாங்க, சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை மும்முரம்... தி.நகரில் அலைமோதும் கூட்டம்...

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. 

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் திரும்பிய திசை எல்லாம் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதனால் ஒவ்வொரு தெருவையும் கடக்கவே சில மணி நேரம் ஆனது. அது மட்டுமின்றி சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் ஆகியவற்றின் விற்பனையும் களை கட்டியது. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள், அதிகளவு ஆடைகளை வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அதிநவீன எக்ஸ்ரே ஸ்கேனர் பாதுகாப்பு வாகனம் மூலம் மக்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.  பொதுமக்களின் கைப்பை மற்றும் உடைமைகளை பிரித்து பார்க்காமலேயே, அதனுள் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து, அவற்றை கண்காணிப்பு திரை மூலம் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக BDDS பயிற்சி பெற்ற காவலர்கள், இரண்டு ஷிப்ட்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.