"திமுக ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல; அரவணைக்கின்ற ஆட்சி " - அமைச்சர் சேகர் பாபு.

"திமுக  ஆன்மீகத்திற்கு எதிரான   ஆட்சி அல்ல;  அரவணைக்கின்ற ஆட்சி " - அமைச்சர் சேகர் பாபு.

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது இல்லை என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற வரும் நொய்யல் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

இந்நிகழ்ச்சி நொய்யல் ஆற்றை காப்பாற்றுகின்ற நிகழ்ச்சியோடு மட்டுமில்லாமல், தண்ணீர் என்பது மனிதனின் உயிரோடு கலந்த ஒன்று, நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிநீரைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் பேரூர் ஆதீனத்தின் இப்பணி சிறப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  

மடங்கள் வெறும் வழிபாடு நடத்துகின்ற இடங்களோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பாதுகாக்கின்ற இடமாக விளங்குகின்றன என தெரிவித்தார். இறைவன் இயற்கை மயமானவர் என்பதால் இயற்கையை சார்ந்த பாதுகாப்புகளில் ஆதீனங்களின் சேவையில் இந்த நொய்யல் நீர் நதி பாதுகாப்பும் ஒன்றாக அமைந்துள்ளது. அகழி, ஆறு, ஊற்று, ஏறி, நீரோடை என பல வடிவத்தில் ஓடும் நீர் நிலைகளை பாதுகாப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை என குறிப்பிட்ட அவர், இயற்கையை மனிதன் காப்பாற்றினால் இயற்கை வளங்கள் மனிதனை காப்பாற்றும் என்றும் இது ஒரு உலகப் பொதுமறை நியதி என்றும் கூறினார்.

நொய்யல் ஆற்றின் மேம்பாட்டை ஆதீனங்கள் பலரும் இணைந்து உலக மக்களுக்கு உணர்த்துகின்ற நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது என்பதாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கின்றோம் என்றும் அதோடு மட்டுமல்லாமல் இத்துறையின் சார்பில் 176 குளங்கள் 78 கோடி ரூபாய் செலவில் தூர்வாரியா ஆட்சி இந்த ஆட்சி என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார். இந்த ஆட்சியில் 5135 கோடி பெருமானம் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஒரு ஆட்சி சுபிட்சமாகவும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கியும் கொண்டிருக்கிறது என்றால் ஒரு ஆட்சியை அன்பர்களுக்கு நல்லாட்சியாக  இருக்கிறது என்றால் அந்த ஆட்சியில் திருவிழாக்கள் நடைபெற வேண்டும். அந்த ஆட்சியில் குடமுழுக்குகள் நடைபெற வேண்டும் என கூறிய அவர் அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 922 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றார்.

ஆதீனங்கள் ஆட்சியாளர்களை தேடிச் சென்ற காலம் உண்டு,  ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்ற காலம் இந்த காலம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும் இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல  ஆன்மீகவாதிகளை இருகரம் கொண்டு அரவணைக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி என தெரிவித்தார். 

பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், மலைக்கோவில்களில் வயது முதிர்ந்தோர்கள் உடல் நலத் தோய்வு இருப்பவர்களுக்கு உதவியாக இருக்க ரோப் கார்கள் தானியங்கி மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்ததன் படி அனுவாவி சுப்பிரமணிய கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அய்யர் மலையில் தோய்வாக இருந்த ரோப் கார் அமைக்கும் பணி சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி உள்ளிட்டவை விரைவுபடுத்தி பணிகள் நிறைவு செய்கின்ற சூழலை உருவாக்கி இருக்கின்றோம். அதுமட்டுமின்றி திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரோப் கார்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டுள்ளது.

அதே போல் மருதமலையில் லிப்ட் அமைக்கின்ற பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுவாமி மலையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லிப்ட் அமைக்கின்ற பணிக்கு சாத்தியை கூறுகள் ஆராயப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இது போன்று மலை சார்ந்து இருக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்களின் இறை தரிசனத்திற்காக ரோப் கார்கள் அமைப்பது லிப்ட் அமைப்பது என்று திராவிட மாடல் ஆட்சியின் ஒரு பங்களிப்பாக இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்துள்ளது.

சமயங்கள் என்பது ஏதோ சன்னிதானங்களை சார்ந்தது என்று மட்டுமல்லாமல்  சமூகத்தை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்திற்காக நொய்யல் பெருவிழாவை ஒரு வார காலத்திற்காக பேரூர் ஆதீனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை துறையின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு  தமிழில் குடமுழுக்கு என்றாலும் சரி அன்னை தமிழில் அர்ச்சனை என்றாலும் சரி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றாலும் சரி ஒரு சமூக நீதிப் புரட்சிக்கு அடித்தளமாக இருக்கின்ற பல்வேறு கொள்கைகள் காரணங்களுக்கு கட்டுக்கோப்போடு எங்களது கரங்களை உயர்த்திப் பிடிக்கின்ற சாமிகளின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிகளை பாதுகாக்கின்ற அவரது இம்முயற்சிக்கு தமிழக அரசும் திராவிட மாடல் அரசும் தமிழக முதல்வரும் இந்து சமய அறநிலையத்துறையும் என்னாலும் அவரது கரத்தை நாங்கள் பிடித்திருப்போம். அவருடைய இம்முயற்சிக்கு அனைத்து விதத்திலும் அரசு ஒத்துழைப்பு நல்கும்.

நீர் என்பது தனியாக பிரிக்க முடியாத மனித உயிரோடு கலந்த ஒரு பொருள். நீர் இல்லை என்றால் உணவில்லை; உணவில்லை என்றால் மனிதன் வாழ உகந்த சூழ்நிலை இல்லை எனவே அந்த நீரை நாம் பாதுகாப்போம். இந்த நீர் பாதுகாக்கும் விழிப்புணர்வை நாம் வலியுறுத்துவோம். பேரூர் கோவிலில் அறங்காவலர் இல்லாதது குறித்த கேள்விக்கு வெகுவிரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில்களில் தவறு நடக்கின்ற பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் தவறுக்கு உண்டான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேரூர் கோவிலில் தர்ப்பணம் தருகின்ற இடத்தில் அடிப்படை வசதிகளை விரைவுப்படுத்துவோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க  | கேரளாவிலும் தடம் பதிக்கும் திமுக