தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மாற்றப்பட வேண்டும்...நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிகள் கூட்டாக குரல்!!

தமிழக அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள தமிழக ஆளுநர் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிகள் கூட்டாக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மாற்றப்பட வேண்டும்...நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிகள் கூட்டாக குரல்!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு, தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வுக்கு விலக்கு, கூட்டுறவுத்துறை சட்ட திருத்த மசோதா  உள்ளிட்ட தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 7 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழக ஆளுநர் சட்டதிட்டங்களின் படி நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

அப்போது குறுக்கிட்ட மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநில அரசின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது ஏற்புடையதல்ல என கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டி. ஆர். பாலு நாட்டில் காட்டாட்சி நடக்க வில்லை என்றும், சட்டப்படியான ஆட்சி தான் என்றும் அந்த சட்டப்படி மத்திய அரசின் அங்கமாக தமிழகம் இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட பாஜக அவை உறுப்பினர் ஒருவர் ஆளுநர் சட்டபடி நடக்கவில்லை என்றால் ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்புவதை விடுத்து நாடாளுமன்றத்தில் முறையிட கூடாது என வலியுறுத்தினார். 

இதையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மாற்றப்பட வேண்டும் எனவும் திமுக எம்.பிகள் கூட்டாக குரல் எழுப்பியுள்ளனர்.