"மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது" உயர் நீதிமன்றம்!!

"மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது" உயர் நீதிமன்றம்!!

நீலகிரி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 19 லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது

நீலகிரி மாவட்டம்  மசினகுடி பகுதியை சேர்ந்த குருசந்த் வைத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்," மசினகுடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் காய்ந்துபோன மூங்கில் மரங்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் தனது தாத்தா காலத்தில் வைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்".

அதவாது, வளர்ந்து காய்ந்துபோன  மூங்கில் மரங்களை வெட்டாததால், அந்த நிலத்தில் மற்ற விவசாயம் செய்ய முடியவில்லை என்றும்,  மூங்கில் மரங்களை அகற்றவில்லலை என்றால் வனப்பகுதியில் காட்டு தீ எற்படவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அந்த மரங்களை தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2008ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் காய்ந்த நிலையில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த  உத்தரவிட.வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி. அருண், அந்த நிலத்தை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அப்பகுதி யானைகளின் வழிதடமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தம் இருக்கக்கூடிய 61.85 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரத்து 309 மூங்கில் கொத்துகள் உள்ளதாகவும், ஒவ்வொரு கொத்திலும் 50 முதல் 80 வரை மூங்கில் மரங்கள் உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 19லட்சம் மூங்கில் மரங்கள் அந்த பகுதியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே யானைகள் வழித்தடத்தில் அமைந்திருக்க கூடிய விடுதிகள், நிலங்களை அனைத்தையும் அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.

அதேபோல், மூங்கில் மரங்களை யானைகள் உணவாக பயன்படுத்தி வருவதாகவும், அதனை வெட்டி அப்புறப்படுத்தினால் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித - விலங்குகள் மோதல்  ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்மந்தப்பட்ட இடம் யானைகளின் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள யானைகள் வழித்தடம் தொடர்பான குழுவிடம் சென்று, மனுதாரர் தனது இடம் யானைகள் வழித்தடத்தில் வரவில்லை என்பதை முறையிடலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் வனத்துறை சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து யானைகள் வழித்தடத்தில் உள்ள இடங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் நிலம் அமைந்துள்ள பகுதி யானைகள் வழித்தட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || "மதுரை எய்ம்ஸ் டெண்டர் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம்" முதலமைச்சர் விமர்சனம்!!