விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றிய வழக்கில் கனரா வங்கி மேலாளரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு ..!

விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றிய வழக்கில்  கனரா வங்கி மேலாளரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு ..!

ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக பதிவான வழக்கில் இருந்து கனரா வங்கி மேலாளரை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலூரை சேர்ந்த தாமோதரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது , பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 50 லட்சம் மதிப்பிலான புதிய 200 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த பணம் அனைத்தும் தன்னுடையது எனவும் தொழிலதிபர் என்ற முறையில் தமக்கு தேவைப்படும் நிலையில் பணத்தை தமது மைத்துனரிடம் கொடுத்து வைத்திருந்ததாக ஸ்ரீனிவாசன் கூறினார். 

இது தொடர்பாக சிபிஐ  வழக்கு பதிவு செய்தது. விசாரணையில், ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாமல்  500 ரூபாய் நோட்டுகள் புதிய 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது. வங்கி கிளையில் அல்லாமல் வங்கியில் உள்ள பணப்பெட்டகம் மூலம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதற்கு வங்கி அதிகாரிகள் துணை போனதாக அவர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி வேலூர் கனரா வங்கியின் அப்போதைய மூத்த மேலாளர் தயாந்தி மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனை எதிர்த்து இருவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ ரூபாய் நோட்டுகள் மாற்றப்படவில்லை என வாதிடப்பட்டது. 

மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது எனவும் இந்த விவகாரத்தில் அவசரகதியில் சிபிஐ வழக்கு பதிவு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, ஆவணங்களில் முறைகேடு செய்து வங்கியின் பண பெட்டகத்தில் இருந்து நேரடியாக பணத்தை மாற்றியது ரிசர்வ் வங்கி விதிகளை மீறியது மட்டுமின்றி வங்கி பாதுகாப்பு மீறிய செயல் எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   | TANUVAS -ன் இளநிலைப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!