"நீதிமன்றம் என்.எல்.சி.க்கு மட்டுமல்ல... தொழிலாளர்களுக்கும் தான்" உயர்நீதிமன்றம் கருத்து!

"நீதிமன்றம் என்.எல்.சி.க்கு மட்டுமல்ல... தொழிலாளர்களுக்கும் தான்" உயர்நீதிமன்றம் கருத்து!

NLC தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து மத்திய அரசும், என்.எல்.சி.யும்,  ஆகஸ்ட் 22ம் தேதி வரை பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NLCயில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர்  நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், NLC நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் NLC தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, NLC நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான  பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து இன்று தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். 

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்தியஸ்தர் நியமிக்க தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறிய நீதிபதி, மத்திய அரசும், NLCயும் பதிலளிக்க ஆகஸ்ட் 22 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக விசாரணையின் போது, இது ஒரு தொடர் பிரச்னையாக உள்ளதால், NLC நிர்வாகத்தின் நலனையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்ட பின் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என  கேள்வி எழுப்பினார். அதற்கு NLC தரப்பில் 10, 15 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரங்களை போலீசுக்கு அனுப்பும்படியும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  இருதரப்பும் ஒப்புக்கொண்டால் தான் மத்தியஸ்தரை நியமிக்க முடியும் என நீதிபதி தெரிவித்தார்.

ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ள அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமானால் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டி வரும். அது இயலாத காரியம் என NLC தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நெய்வேலியில் நிலக்கரி தீர்ந்து விட்டால் மக்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பி விடுவர் என்றார். 

நீதிமன்றம் NLCக்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கும் தான் எனவும், நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான NLCயை கைவிட முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, 7 கோடி பேருக்கு ஒரு லட்சம் போலீசார் தான் இருக்கின்றனர். அத்தனை பேரையும் என்.எல்.சி.க்கு அனுப்ப முடியாது என்றார்.

இதையும் படிக்க:அதிகாலையில் பணிக்கு சென்ற இளைஞர்...மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!!