தொடர் கனமழையால் பருத்தி செடிகள் சேதம்...! விவசாயிகள் வேதனை...!

மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் பருத்தி செடிகளில் உள்ள பஞ்சுகள் மழையில் நனைந்து சேதம்... உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை...

தொடர் கனமழையால் பருத்தி செடிகள் சேதம்...!  விவசாயிகள் வேதனை...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள், பருத்தி சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 4961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தரங்கம்பாடி தாலுகா கீழையூர் கிராமத்தில், சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகளில் பஞ்சுகள் எடுக்கும் தருவாயில் உள்ள நிலையில், மழையில் பஞ்சுகள் முற்றிலும் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஒரு முறை பருத்தி சாகுபடி செய்தால் அதில் மூன்று முறை பஞ்சு எடுக்க முடியும். முதல் பருவத்தில் பருத்தி பஞ்சு எடுக்கும் சூழ்நிலையில் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் இரண்டாவது முறை பருத்தி பஞ்சு எடுக்கும் போது மழையில் நனைந்து, பருத்தி செடிகளில் உள்ள பஞ்சுகள் நனைந்து முற்றிலும் வீணாகி உள்ளது என விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதேபோல் கிடாரங்கொண்டான், சேமங்கலம், கஞ்சாநகரம், கருவாக்கரை, நடுக்கரை உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி நனைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.