"பாரத் என மாற்றுவதால் சிக்கல்கள் சமாளிப்பது கடினம்" - பா. சிதம்பரம்

"பாரத் என மாற்றுவதால் சிக்கல்கள் சமாளிப்பது கடினம்"  - பா. சிதம்பரம்

இந்தியாவின் பெயரை பாரத் என  மாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பது கடினம் என திருவாரூரில் கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் நாச்சி கடைதெருபகுதியில் கட்சி கொடியேற்று நிகழ்ச்சிக்காக வருகை தந்த சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“ இந்தியா என்ற பெயரை தமிழகத்தில் பாரதம் என்றும், வட மாநிலங்களில் பாரத் என்றும் அழைப்பது வழக்கம். அதில் தவறு ஏதும் இல்லை. அதே நேரத்தில், இந்தியாவின் பெயரை பாரத் என அலுவல் ரீதியாக மாற்றினால், ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்கின்ற வாசகத்தை மாற்றி, ரிசர்வ் பேங்க் ஆப் பரத் என அச்சடிக்க வேண்டும். அதற்கு அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது ஏற்பட்ட சிரமங்களை நாம் அறிவோம். அதேபோல, ரிபப்ளிக் ஆப் பாரத் என மாற்றினால் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மாற்ற வேண்டும். இதுபோல நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனை சமாளிப்பது கடினம்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, என்பது சாத்தியமில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பெரும்பான்மையை எந்த ஒரு அரசும் இலக்க நேரிடும். குறிப்பாக ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கும் போது, பெரும்பான்மையை அந்த அரசு இழந்து விடும் அப்பொழுது தேர்தல் நடத்தி தான் ஆக வேண்டும்.

மாநிலங்களில் அவ்வப்போது தேர்தல்கள் நடைபெற்றால்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தை மக்கள் உணர்த்தவும் முடியும் எனவே இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் வருவது நல்லது என்பது எனது சொந்த கருத்து”, என தெரிவித்தார். 

இதையும் படிக்க   |  "திமுகவில் உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" - சீமான் விமர்சனம்