5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி...!

5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி...!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. விடியவிடிய கொட்டித் தீர்த்த மழையால் சுரங்கப்பாதைகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கடந்த 27-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் வட தமிழ்நாட்டில் கனமழை வெளுத்து வருகிறது. சென்னையில் அசோக் நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆழ்வார்பேட்டை, நந்தனம், திருவல்லிக்கேணி, மெரினா பீச் , மயிலாப்பூர், மந்தவெளி ,  வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. 

கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள்  பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் சென்னையில் அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை உள்ளிட்ட 5 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அதேபோல் அம்பத்தூர் மற்றும் ஆவடி ரயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கியிருந்ததால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதற்கிடையே சென்னை கோட்டத்தில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் களத்திற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக சென்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், பொது மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கொளத்தூா் தொகுதியில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சா் சேகா் பாபு நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து நள்ளிரவில் சென்னை தியாகராய நகா் பகுதியில் மேயா் பிாியா ஆய்வு மேற்கொண்டாா்.  அப்போது செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், சென்னை முழுவதும் 16 ஆயிரம் பணியாளர்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என தொிவித்தாா். பாதிப்படைந்த மக்களை சமுதாய நலக்கூடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா். 

தொடர் கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவள்ளூா் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூாிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.