தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு நாளை துவக்கம்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 இரண்டு ஆண்டுகளாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வுகளுக்கான அறிவிப்பையும் மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

இதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாநிலம் முழுவதும் நாளை துவங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதி துவங்கி 30ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,  10ம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

3,119 மையங்களில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர்.  இதற்காக தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு மின்தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.