காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி உரையாற்றினார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சாதி மத சமயச் சண்டைகள் ஏதும் இல்லை என்றும்,  சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

1. வடமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பல மாநில அரசுகளும் பாராட்டி உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்து அச்சத்தை அரசு போக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

2. காவல்நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளை தடுப்பதே அரசின் இலக்கு என்றும் விளக்கமளித்தார்.

3. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறையிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : வேங்கைவயல் தீண்டாமை விவகாரம் : 1 பெண், 2 ஆண்...வெளியான அதிர்ச்சி தகவல்... !

4. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, யார் ஆட்சியில் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.

5. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தடை செய்ய திமுக ஆட்சியில்தான் முதன்முறையாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக பெருமைபட கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 
போதைப் பொருட்களுக்கு எதிராக  மாவட்டங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

6. கோடநாடு வழக்கு குறித்த சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும், குற்றவாளி யார் என்பது விரைவில் தெரிய வரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

7. தமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாடுகள் மூலமாக குற்றங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், கொள்ளை சம்பவங்கள் 18 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் பெருமைபட கூறினார்.

8. பெண் காவலர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  காவல்துறையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்.

9. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை துரிதமாக செயல்பட்டு மக்கள் உயிர்களைக் காப்பாற்றி வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 62 கோடியே 18 லட்சம் ரூபாயில் மாநிலம் முழுவதும் 17 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.