மாற்றுத்திறனாளிகளுக்கான 4 % இட ஒதுக்கீடு; ஓராண்டுக்குள் நிரப்பப்படும் முதலமைச்சர் அறிவிப்பு!

அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்  காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளிடம் சென்று, அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  மாற்றுத் திறனாளிகள் நலனில் திமுக அரசு தனிக் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பின்னடைவு ஏற்பட்டுள்தாகவும் காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் கூறினார். 

தொடர்ந்து, பேசிய முதலமைச்சர், உயர் கல்வி பயிலும், ஆயிரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்க, ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிட்டுப்பட்டுள்ளதாக கூறினார்.