”பாஜகவின் சர்வாதிகாரம் என்ற காட்டுத் தீயை அணைப்பது நமது கடமை” முதலமைச்சர்!

”பாஜகவின் சர்வாதிகாரம் என்ற காட்டுத் தீயை அணைப்பது நமது கடமை” முதலமைச்சர்!

பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் என்ற காட்டுத் தீயை அணைக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை இந்த கோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், திருவாரூர் தேர் போன்று பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். 

முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, நவீன தொழில்நுட்பத்தில் கருணாநிதியுடன் அமர்ந்திருப்பது போல் தேஜஸ்வி யாதவ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிக்க : தற்காலிக கடைகள் : பழனி நகராட்சிக்கு உத்தரவிட முடியாது...நீதிமன்றம் தீர்ப்பு!

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சிறப்புகள் மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து பட்டியலிட்டார். கோயில் தேர் எப்படி புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேருமோ அதுபோன்று, கலைஞரின் அரசியல் வாழ்க்கை திருவாரூரில் நிறைவுற்றதாக தெரிவித்தார்.

முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி என்றும், அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் கருணாநிதி என்றும் பெருமிதம் தெரிவித்தார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்றான பாட்னாவில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள எதிர்கட்சிகளின் ஒருங்கணைப்பு கூட்டத்தில் தான் பங்கேற்க உள்ளதாக கூறியவர், பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் என்ற காட்டுத் தீயை அணைக்கும் கடமை நாம் அனைவருக்கும் இருப்பதாக கூறினார்.

இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டிய நெருக்கடியான கால கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் திமுகவினருக்கு அழைப்பு விடுத்தார். .

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் நிதிஷ்குமார் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.