இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

பொதுவாக புதிய அரசு பொறுப்பேற்றதும், கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு மாதத்திற்குள் நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கொரோனா 2ஆவது அலையின் காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் தள்ளிப்போனது. இந்நிலையில், விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், நிதி சுமையை தீர்க்கவும் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆலோசனைகள் நடந்துவருகிறது. குறிப்பாக, அ.தி.மு. க ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்ட பட்ஜெட்டும் இடைக்கால பட்ஜெட் என்பதால், அடுத்த ஆறு மாதத்திற்கான நிதி ஆதாரங்களை புதிய அரசு ஒதிக்கீடு செய்ய வேண்டியுள்ளது.

அதே போல், தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்களுக்கு ஆளுநர் உரை மூலம் உயிர் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதி ஒதிக்கீட்டையும் முடித்துவிட்டால், பணிகள் வேகமாக நடக்கும் என்று முதலமைச்சர் நினைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.