கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு...!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு...!

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் தன்னிறைவு பெற, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்காக 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

2023 - 24 நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து தாக்கல் செய்தார்.  வேளாண் பட்ஜெட் குறித்து விளக்கம் அளித்து உரையாற்றிய அவர், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வேளாண் துறையில் அதிக மகசூல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தூர் வாருதல் மற்றும் மழைப்பொழிவால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரலாறு காணாத வகையில் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், சாகுபடி பரப்பு 1 கோடியே 93 லட்சம் ஹெக்டேர் அளவில் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். 

இதையும் படிக்க : வேளாண் பட்ஜெட்2023: முக்கியத் திட்டங்கள்...!!

கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் 230 கோடி ரூபாயில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து, ரேசன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் எனவும், சிறு தானியங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க “தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்” செயல்படுத்தப்படும் எனவும், அதற்காக 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.