" தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும் " - தூய்மை பணியாளர்கள் மாநில தலைவர் பேட்டி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற அக்டோபர் மாதம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் - திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் தூய்மை பணியாளர்கள் மாநில தலைவர் பேட்டி.

" தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும் " - தூய்மை பணியாளர்கள் மாநில தலைவர் பேட்டி

தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் மாதம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இதற்கான பிரச்சாரக் கூட்டம் ஜூலை 4-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சங்கத்தின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மேலும் பேசிய அவர், வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள போராட்டத்தில், சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பது போன்று,  தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, கொரோனா காலங்களில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையான ரூ. 15,000 இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் மருத்துவத்துறை, சுகாதாரத் துறை ஆகியவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு எங்களை ஏமாற்றி விட்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் தங்களது சங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு, இடத்திற்கு இடம், மாவட்டத்திற்கு மாவட்டம் சம்பளத்தொகை மாற்றம் ஏற்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்கின்றோம். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுக்க தயங்கினால், வருகிற அக்டோபர் மாதம் சென்னையில் இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.