”தமிழ்நாடு” என்ற பெயருக்காக தன் உயிரை விட்ட தியாக செம்மல்..!

”தமிழ்நாடு” என்ற பெயருக்காக தன் உயிரை விட்ட தியாக செம்மல்..!

சென்னை மாநிலத்தை ”தமிழ்நாடு” என்று பெயர் மாற்றக்கோரி தன் இன்னுயிரை விட்டவர் தியாகி சங்கரலிங்கனார். இன்று தமிழ்நாடு நாள் தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மொழி வாரியாக பிரிக்கப்பட்ட இந்தியா:

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இந்தியா மொழி வாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஒருகட்டத்தில் அந்த கோரிக்கை வலுத்ததையடுத்து,  ஒன்றிய அரசு வேறுவழியின்றி 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன்படி தமிழருக்கென்று ஒரு மாநிலமாக சென்னை மாநிலம் அறியப்பட்டது.

தியாகி சங்கரலிங்கனார்:

அதன்பின் சென்னை மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றக்கோரி, சங்கரலிங்கனார் என்பவர் தனியாக போராடினார். அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 76 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருந்து, உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார. அவருக்கு பிறகு தான் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்து சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, ‘தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட்டது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அறிஞர் அண்ணா நிறைவேற்றினார்.

தமிழ்நாடு நாள் ஜுலை 18:

தமிழ்நாடு என பெயரிடப்பட்ட பிறகு  கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டது. ஆனால்  கடந்த 2021 ஆம் ஆண்டு  புதிய முதல்வராக பொறுப்பேற்ற  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அன்றைய நாளான ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது.

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்:

கடந்த 2021 ல் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போலவே, இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, தமிழ்நாடு என்ற பெயருக்காக தன் உயிரையும் விட்ட தியாகி சங்கரலிங்கனாருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகரில் உள்ள சங்கரலிங்கனார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.