ஆதீன நில விவகாரம்; மீண்டும் விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

ஆதீன நில விவகாரம்; மீண்டும் விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிவந்திபுரம் கிராமத்தின் மீது உரிமை கோரும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கோரிக்கையை மீண்டும் விசாரித்து சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான பண்டாரா சன்னதி தாக்கல் செய்துள்ள மனுவில் 1614ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நாயக்கர் மன்னர் ஒருவரால் 1008 ஏக்கர் 34 சென்ட் பரப்பளவு கொண்ட சிவந்திபுரம் கிராமத்தையே  ஆதீனத்துக்கு நன்கொடையாக கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 

1864-ம் ஆண்டு இனாம் ஆணையரிடம் முறையாக பதிவு செய்து, 1901-ம் ஆண்டு வரை ஆதீனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்ததாகவும், தமிழ்நாடு பொது அறக்கட்டளை சட்டம் வந்தபின்னர் அந்த கிராமம் முழுவதும் உள்ள நிலம் பலருக்கு குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 1963-ம் ஆண்டு கொண்டுவந்த இனாம் சொத்துக்கள் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி சட்டத்தை எதிர்த்து செட்டில்மென்ட் அதிகாரியிடம் முறையீட்டு, 1980-ம் ஆண்டு ஆதீனத்தின் பெயரில் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டதாகவும், அதற்கு 592 குத்தகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பாளர்கள் நிலத்தில் பயிரிடும் குத்தகைதாரர்கள்தான் என்றும், நிலத்தின் மீது உரிமை கோர முடியாது என்றும் உத்தரவிட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பும் மாறி மாறி தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்தபோது, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கான பொறுப்பு உதவி செட்டில்மென்ட் அதிகாரி விசாரிப்பார் என்று கடந்த 2016-ம் ஆண்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைக்கு அழைப்பு வரும் என காத்திருந்ததாகவும், ஆனால் ஆதீனம் தரப்பில் எந்த ஒரு ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, தங்கள் கோரிக்கை 2015-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதியே நிராகரிக்கப்பட்டது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

உதவி செட்டில்மென்ட் அதிகாரி தவறான தகவல்களை அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவித்து ஏமாற்றியுள்ளதாகவும், தங்களிடம் அனைத்து ஆணவங்களும் இருக்கும்போது, அதை பரிசீலிக்காமல், உதவி செட்டில்மென்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ரவிச்சந்தர் தேவக்குமார் ஆஜராகி, நிலத்தின் மீதான சுவாதீனம் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல், ரயத்துவாரி பட்டாவை ஆதீனத்தின் சார்பில் கேட்டதால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுஎன்று வாதிட்டார்.

ஆதினம் தரப்பில் வழக்கறிஞர் கே.பி.சஞ்சீவ்குமார் ஆஜராகி, இந்த சொத்துக்களுக்கு 1980ம் ஆண்டு ஆதீனத்தின் பெயரில் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளதை, செட்டில்மெண்ட் அதிகாரி பரிசீலிக்கவில்லை என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சிவந்திபுரம் கிராமம் ஆதினத்திற்கு சொந்தமானது என்பது குறித்து, செட்டில்மெண்ட் அதிகாரி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அப்போது இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அவற்றின் அடிப்படையில், விரைவாக விசாரணை நடத்தி சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக் வேண்டும் என்று செட்டில்மெண்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:ஜெயலலிதாவின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யக் கோரி மனு!