பழங்குடியின தம்பதியின் 5 மாத பெண் குழந்தை கடத்தல்....

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மைசூரைச் சேர்ந்த நாடோடி பழங்குடியின தம்பதியினரின் 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின தம்பதியின் 5 மாத பெண் குழந்தை கடத்தல்....

மைசூர் ஒஞ்சூர் கல்லரழி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளது. நாடோடி வாழ்க்கை வாழும் இவர்கள் நேற்று முன்தினம் மைசூரிலிருந்து வந்து ஆனைமலை பயணிகள் நிழற்குடை அருகே தஞ்சமடைந்திருந்தனர்.

அப்போது நேற்று இரவு அங்கு சென்ற  அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 5 மாத குழந்தை அம்முவை  விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தரமறுத்துவிட்டனர். பின்னர் சங்கீதா கைகுழந்தையை எடுத்துக்கொண்டு சாலையோரம் உள்ள சிற்றுண்டி கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்  குழந்தையை பார்த்து விட்டுத் தருவதாக கூறி கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு நபர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார். பின்னர் சங்கீதாவின் அலறல்  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது குழந்தை கடத்தப்பட்டது  தெரியவந்தது.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.  மேலும் குழந்தையை விற்பனை செய்வதற்காக கடத்தினார்களா? அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தாயின் கண்முன்னே 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.