கோவையில் நடைபெறுகிறதா அதிமுக பொதுக்குழு கூட்டம்?

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் நடைபெறுகிறதா அதிமுக பொதுக்குழு கூட்டம்?

கடந்த 23 ஆம் தேதி  நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என  நீதிமன்றம் தடைபோட்டது. 

இதனால் அன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த  23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன்  ஒட்டுமொத்த அதிமுகவினரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை  தேவை என வலியுறுத்துவதாகவும், இதனால் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் அடுத்த பொதுக்குழுவில்  ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்படும் என  அக்கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இதனிடையே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் நேற்று  தனித்தனியே தொண்டர்களை சந்தித்து  ஆதரவு திரட்டினர். அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அதிமுக தலைமை பதவியை கைப்பற்ற  கடந்த பத்து ஆண்டாக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி  கோடி கோடியாக  குவித்து வைத்திருக்கும்  பணத்தில் ஒரு பகுதியை வாரி இறைத்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய செயலர்களை தன் பக்கம் வளைத்து போட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸின்  அரசியல் நகர்வு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அவசர அவசரமாக ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில்  தனது ஆதரவு தலைவர்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுக்குழு கூட்டத்தை சென்னையை தவிர்த்து தமது செல்வாக்கு மிகுந்த கோவை அல்லது கொங்கு மண்டலத்தில் ஏதாவது  ஒரு மாவட்டத்தில் நடத்தலாமா என்பது குறித்து  ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர்  எனும் மகுடம் சூட்டும் போது  ஓபிஎஸ் மற்றும்  சசிகலாவின் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து ரகளை செய்தால் அதனை முறியடிக்கும்  வகையில்  பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.