பல ஆண்டு கனவு நனவானது...மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!

பல ஆண்டு கனவு நனவானது...மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் வசித்துவரும் 'காணி' பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் கரங்களால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  

கோரிக்கை வைத்த மக்கள்:

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை ஒட்டியுள்ள அகஸ்தியர் காலனி, சின்ன மைலார், பெரிய மைலார் உள்ளிட்ட பகுதிகளில் 'காணி' பழங்குடி இனமக்கள் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் இவர்கள், பட்டா இல்லாததால் வனப் பாதுகாப்பு என்ற பெயரில் இங்கிருந்து வெளியேற்றப் படுவோமோ என்ற அச்சத்தில் இருந்து வந்தனர். பட்டா இல்லாததால் வங்கியில் கடன் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்த இவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க: மீண்டும் உயிர்பிக்கும் வழக்கு...செந்தில் பாலாஜி பதவிக்கு வந்த புதிய சிக்கல்...மு.க.ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன? 

தனிநபர் பட்டா:

தொடர்ந்து, பட்டா வழங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்த மாவட்ட ஆட்சியர், இன்று நெல்லையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் முதற்கட்டமாக, 'காணி' பழங்குடியின மக்கள் 78 பேருக்கு தனி நபர் பட்டா கிடைக்கச் செய்தார். இதனால் அந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்:

இதுநாள் வரை இருளடைந்திருந்த தங்களின் வாழ்வில், முதலமைச்சர் கைகளால் பட்டா பெற்றதன்மூலம் வெளிச்சம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் பல ஆண்டு கனவை நனவாக்கிய தமிழக அரசுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும் பழங்குடியின மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.