புதிய பயனாளிகளாக 7 லட்சம் பேர் தேர்வு - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் 7 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், கடந்த அக்டோபர் 25-ந் தேதி வரை முதல்முறையாக நிராகரிக்கப்பட்ட பெண்கள், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். இதில், தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சோதனை அடிப்படையில் அவர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணிகளும் தொடங்கியது.

இதையும் படிக்க : 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை...!

இந்நிலையில், சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் 7 லட்சம் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல், மகளிர்உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

மேல் முறையீடு செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.