ஆரம்பமே அமர்க்களம் தான் போல.. லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. சிஎஸ்கே தொடர்ந்து 2 தோல்வி!!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பமே அமர்க்களம் தான் போல.. லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. சிஎஸ்கே தொடர்ந்து 2 தோல்வி!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் போட்டி, மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா, அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசிய உத்தப்பா, ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபுள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 22 பந்துகளில் 35  ரன்கள் சேர்த்தார். அதன் பின் வந்து அதிரடியாக விளையாடி ஷிவம் துபே 49 ரன்கள் குவித்தார். இறுதியில், 7 விக்கெட் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 210 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்கள் விளாசிய நிலையில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க வீரான டி காக், பொறுப்பான ஆட்டத்தால் 61 ரன்கள் குவித்தார்.

இதைடுத்து களமிறங்கிய லெவிஸின் அதிரடி ஆட்டத்தால், போட்டி விறுவிறுப்படைந்தது.  23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக களத்தில் இருந்த ஆயுஷ் படோனி 19 ரன்கள் எடுத்தார்.

இதனால், லக்னோ அணி 19 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ளது.