மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது போட்டி, புனேவில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை அணியும் ஐதராபாத் அணியும் மோதின.

மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இப்போட்டியில், மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய,  முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே இணை அதிரடி தொடக்கம் தந்தது. பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த தோனி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாச, சென்னை அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன்மூலம், 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது. 57 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் விளாசி 99 ரன்கள் குவித்த சென்னை அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.