உடைந்தது பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சி.! தேசிய அரசியலில் பரபரப்பு.! 

உடைந்தது பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சி.! தேசிய அரசியலில் பரபரப்பு.! 

பீகாரில் தலித் மக்களின் முகமாக பார்க்கப்படும் கட்சி லோக் ஜனசக்தி. ஜனதா கட்சியிலிருந்து அதன் முன்னணி தலைவரான ராம் விலாஸ் பஸ்வான் விலகி லோக் ஜனசக்தி என்னும் கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியைத் தொடங்கி காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறையும், பாஜக ஆட்சியில் இருமுறையும் மத்திய அமைச்சராக இருந்தார்.

பாஜகவின் நெருங்கிய கூட்டணிக்கட்சி தலைவர் என்று அறியப்பட்ட ராம் விலாஸ் பஸ்வான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து கட்சியின் தலைமை பொறுப்புக்கு அவரது மகன் சிராக் பஸ்வான் பொறுப்பேற்றார். ஆனால் அப்போதே சிராக் பஸ்வானுக்கும், அவரது சித்தப்பா பசுபதி குமாருக்கும் இடையே அதிகாரமோதல் வெளிப்படையாக வெடித்தது. 

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின் போது நிதிஷ்குமாரை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிராக் பஸ்வான் பாஜக போட்டியிடும் தொகுதியில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதன் காரணமாக அம்மாநிலத்தில் நிதிஷ்குமாரின் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. இது பாஜகவின் ராஜதந்திரமாக பார்க்கப்பட்டாலும், தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக சிராக் பஸ்வானின்  லோக் ஜனசக்தி ஒரு இடத்தில மட்டுமே வெற்றிபெற்றது. 

அந்த தோல்வியைத் தொடர்ந்து லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவிக்கு சிராக் பஸ்வானின் சித்தப்பா பசுபதி குமார் முயன்று வந்தார். அந்த மோதலின் ஒருபகுதியாக சமீபத்தில் சிராக் பஸ்வானுக்கு பதிலாக, பசுபதி குமாரை லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக்க வேண்டும் என மொத்தமுள்ள ஆறு எம்.பி-க்களில் பசுபதி குமார் உட்பட ஐது பேர் கையெழுத்திட்டு சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சிராக் பஸ்வானைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கவும் ஐந்து எம். பி-க்களும் கடுமையாக முயன்றனர். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிராக் பஸ்வான், "அவர் என் சொந்த ரத்தம் இல்லை. கட்சியைத் தன்னுடைய சுயநலத்துக்காக உடைக்கப் பார்க்கிறார். அவர் கூடிய விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்" என்று கூற அதற்கு பதிலடியாக 'உன் சித்தப்பா இறந்துவிட்டார் என நினைத்துக்கொள்' என பசுபதி குமார் ஆவேசமாக கூறினார். 

இந்நிலையில், பசுபதி குமார் தலைமையில் கூடிய செயற்குழு கூட்டத்தில், சிராக் பஸ்வானைக் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சூரஜ் பான் என்பவரை தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து பசுபதி குமார் உள்ளிட்ட ஐந்து எம்.பி-க்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக சிராக் பஸ்வானின் ஆதரவாளரான லோக் ஜன சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் கலீக் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதன் காரணமாக ராம் விலாஸ் பஸ்வான் ஆரம்பித்த லோக் ஜனசக்தி கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளது. இந்த மோதல் கூடிய விரைவில் முடிவுக்கு வராவிட்டால் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்க நேரிடலாம். மேலும் கட்சி இருவர் தலைமைக்கு வந்தால் கூட மற்றொருவர் கட்சியை உடைந்து புதிய கட்சியை தொடங்கலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். .