கொரோனா தடுப்பூசியை கண்டவுடன் ஓட்டம் பிடிக்கும் கிராம மக்கள்...

கர்நாடகா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து, சுகாதாரத்துறையினரை கண்டவுடன் ஓட்டம் பிடிக்கும் கிராம மக்களின் செயல் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

கொரோனா தடுப்பூசியை கண்டவுடன் ஓட்டம் பிடிக்கும் கிராம மக்கள்...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருபுறம் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலும், நிலவி வருகிறது. இந்த நிலையில்  கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள காஞ்சஹரகள்ளி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுகாதார துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்த முகாம் அமைத்து கிராம மக்களை அழைத்தபோது ஒருவர்கூட தடுப்பூசி செலுத்த முன்வரவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து தடுப்பூசி செலுத்தி க்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் சுகாதாரத் துறை அதிகாரிகளை கண்ட உடன் கிராம மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

தங்களின் தீவிர முயற்சியின் மூலம் கடந்த இரண்டு நாட்களில்  இந்த கிராமத்தில் மொத்தம் 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அடுத்த கட்டமாக கிராம பஞ்சாயத்து தலைவரை முன்னிறுத்தி மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.