பாக். பிரதமர் இம்ரான்கான் பதவியில் நீடிப்பாரா ? பாக். நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

பாக். பிரதமர் இம்ரான்கான் பதவியில் நீடிப்பாரா ? பாக். நாடாளுமன்றத்தில் நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை எம்கியூஎம் கட்சி விலக்கிக் கொண்டு, எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 164-ஆக குறைந்தது.

342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், ஆட்சியமைக்க 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும். இதனால், வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான்கானின் அரசு கவிழ்வது உறுதியானது.  இதனையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான், கடைசி வரை நின்று தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.