அரசு நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

6 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பொதுச் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாகவும்.,70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பிரதமர் பரிசாக அளிப்பதாகவும் ராகுல் சாடியுள்ளார். முதலில் வேலைவாய்ப்புகளை பறித்தார், பின்பு பணமதிப்பிழப்பை அறிவித்தார், தற்போது நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்பதாக ராகுல் ஆவேசம் தெரிவித்துள்ளார்..

 விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேதுறை, பி. எஸ்.என்.எல் கோபுரங்கள் உள்ளிட்டவை நாட்டின் கிரீடத்தில் இருக்கும் வைரம் போன்ற தொழில்கள் என்று குறிப்பிட்ட அவர், இதனை மோடி விற்பது வர்த்தகத்தை பெரிதளவு பாதிக்கும் என தெரிவித்தார்.

மத்திய அரசின்  இந்த திட்டத்தால் சிறு, குறு தொழில்துறைகள் அழிந்துவிடும் என்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகும் என்று ராகுல்  குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இத்தகைய திட்டம் வர்த்தகத்தில் எத்தகைய ஆபத்தினை ஏற்படுத்தும் என மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது இளைஞர்களின் கடமை என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.