“புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி லஞ்சம் வாங்கியுள்ளார்” - நாராயனசாமி குற்றச்சாட்டு..!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ரெஸ்ட்ரோ பார்களுக்கு உரிமம் வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்ட்ரோ பார்களின் உரிமம் வழங்க முதல்வர் ரங்கசாமி ரு.20 லட்சம் லஞ்சம் பெறுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார் மேலும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஆளுநர் ஆர். என்.ரவி முயற்சி செய்து திமுகவை பலவீனப்படுத்த முயல்வதாகவும் அது தமிழகத்தில் எடுபடாது எனவும் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,..

“பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்கட்சித்தலைவர்களை மிரட்டுவதும், முதலமைச்சர்கள் மீது பொய் வழக்குகளை போடும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். டில்லியில் இரண்டு அமைச்சர்கள், ஒரு எம்.பி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து சிறையில் உள்ளார்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் தேர்தல் நடக்கும் சமயத்தில் ராஜஸ்தான் முதல்வரின் மகன் மீதும் விசாரணை நடக்கின்றது. அரவிந்த கெஜ்ரிவாலையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்”, என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைப்புகள்  75 வழக்குகள் தான் போட்டது, ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை 
5,900 க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை எதிர்கட்சிகள் மீது போடப்பட்டு கைது செய்து வருகின்றது. இந்த வழக்குகளில் முடிந்தது 6 வழக்குதான், நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றார் பிரதமர் மோடி.
ஆனால் 40 சதவீத கமிஷன் கேட்ட பொம்மையை ஒன்றும் செய்யவில்லை, வியாபம் ஊழலில் சிக்கி இருந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, அசாம் மாநில முதலமைச்சர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது, அவர் பாஜகவில் இணைந்த உடன் அந்த வழக்கை மூடி மறைத்துள்ளது இதன் மூலம் நரேந்திரமோடி, மத்திய அரசின் இயந்திரங்களை முடிக்கி விட்டு எதிர்கட்சித்தலைவர்களை கலங்கப்படுத்த முயற்சி செய்து வருகின்றது”, என்றார்.

பிரதமர் மோடியின் வேடம் கலைந்து விட்டது என்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் அம்பானி முதற்கொண்டு பாஜக ஆட்சியார்கள் மீது விசாரணை செய்து சிறையில் அடைப்போம். ஏன் பிரதமர் மோடியையே விசாரணைக்குட்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில ஆளுநர்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, கிரண்பேடி கொடுத்த தொல்லையை தமிழகத்தில் ஆர். என்.ரவி தமிழக அரசுக்கு கொடுத்து வருகின்றார்.  இது இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முயற்சி செய்து திமுகவை பலவீனப்படுத்த முயல்கிறார் ஆர். என்.ரவி, இந்த வேலை தமிழகத்தில் எடுபடாது என்றும் மக்கள் தெளிவாக உள்ளார் என்றார் மேலும் தமிழக அரசு வளர்ச்சிக்கு குந்தகம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றார்.

இதனால் பாதிப்பு பாஜக மற்றும் ஆளுநருக்கே இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்றும் மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் ஆர். என்.ரவியை திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்ட்ரோ பார்களின் உரிமம் வழங்க முதல்வர் ரங்கசாமி ரு.20 லட்சம் லஞ்சம் வாங்குவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் “பொதுப்பணித்துறையில் மொத்தமாக 30 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாகவும், அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டுமே 13 சதவீதம் கமிஷன் பெறுவதாகவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியவர் இதற்கு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் தவறு என்றால் என் மீது வழக்கு தொடரட்டும்”, என்றார்.

இதையும் படிக்க  | ராஜஸ்தானில் தீவிரமடையும் தேர்தல் பணிகள்..! லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையினர் கைது..!