இரவு நேர ஊரடங்கு அமல்...மத்திய பிரதேச அரசு....!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு அமல்...மத்திய பிரதேச அரசு....!!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது; இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில மற்றும் யூனியன் அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்கள் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாநில அரசை முடிவெடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த படுவதாகவும் இவை இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது பொதுமக்கள் வெளியில் வரக் கூடாது எனவும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு என்பது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை மத்திய பிரதேச மாநிலத்தில் கண்டறியப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கையாக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.