நாட்டை வலிமையானதாக கட்டமைக்க புதிய கல்விக் கொள்கை அவசியம்: பிரதமர் மோடி

நாட்டை வலிமையானதாக கட்டமைக்க புதிய கல்விக் கொள்கை அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டை வலிமையானதாக கட்டமைக்க புதிய கல்விக் கொள்கை அவசியம்:  பிரதமர் மோடி
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மத்தியக் கல்வித்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் புதிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.  
21ம் நூற்றாண்டில் இளைஞர்கள் தனித்துவமான செயலாக்கத்தை விரும்புகிறார்கள் எனத் தெரிவித்த அவர், நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 14 கல்லூரிகள் பொறியியல் பாடத்தை மாநில மொழிகளில் கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான கல்விமூலம், எதிர்காலத்துக்கேற்ப மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள் என்றும், செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.