வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...ரெட் அலர்ட் எச்சரிக்கை!

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...ரெட் அலர்ட் எச்சரிக்கை!

வடமாநிலங்களில் கனமழை பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்படாத நிலையில், மகாராஷ்டிராவுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒடிசா, மேற்குவங்கம்,  ஜார்கண்ட் நோக்கி ஓரிரு நாட்களில் நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் யமுனா நதி மீண்டும் எச்சரிக்கை அளவைக் கடந்து 205 புள்ளி 60 மீட்டரை எட்டியுள்ளது. இதனால் மயூர் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன. 

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவிலும் யமுனா வெள்ளத்தால், கடலுக்கு நடுவே இருப்பதுபோல் தாஜ்மஹால் மிளிர்ந்தது. ஜம்முகாஷ்மீர் தோடாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திவாரி ஏரி கரைபுரண்டோடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். குஜராத்தின் வல்தாத் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் முழங்கால் வரை மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : மகளிர் உரிமைத் தொகை : நாளை முதல் வீடு தோறும் டோக்கன் விநியோகம் !

மகாராஷ்டிராவில் பல்கார், ராய்கட் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும், தானே, மும்பை, ரத்னகிரி ஆகிய நகரங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு துணை முதலமைச்சர் அஜித்பவார் உத்தரவிட்டுள்ளார்.

ராய்கட் மாவட்டத்தின் ரசயானி காவல்நிலையத்தில், கனமழையால் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியது. உத்தரகாண்ட்டில் கனமழை மற்றும் மேகவெடிப்பால் பிதோரகர் மாவட்டத்தில் வாகனத்துடன் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தெலங்கானாவில் நிசாமாபாத், பத்ரத்ரி, கம்மம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.