டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை: ஆறுதல் கூறிய ராகுலின் வீடியோவை நீக்ககோரி நோட்டீஸ்...

டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை: ஆறுதல் கூறிய ராகுலின் வீடியோவை நீக்ககோரி நோட்டீஸ்...

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது பெற்றோரின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

மேலும் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில்,சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றைத் தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன் என பதிவிட்டு சிறுமியின் பெற்றோருடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரியுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியது போக்சோ சட்டப்படி விதிமீறல் எனத் தெரிவித்துள்ள ஆணையம் உடனடியாக அந்தப் புகைப்படத்தை நீக்கக் கோரியுள்ளது.மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 3 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கவும் டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.