சசிகலாவிற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்றதாக சசிகலா மீது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை அதிகாரிகள் 2 கோடி லஞ்சம் பெற்றதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, இது உண்மை தான் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதேநேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.